நண்பனே,
இறைவன் உனக்கு நல்ல சிந்தனையை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
உண்மையில் உன்மீது எனக்குக் கடும் கோபம், வீட்டிற்கு போன் செய்தபோது அம்மா சொன்னார்கள் " நீ இன்று என் வீட்டிற்கு பயணம் சொல்ல வந்தாயாம்.இது ஆறாவது முறை ! மீசை முளைக்காத வயதில் கண் கலங்க வார்த்தைகளை மென்று முழுங்கி முதன்முதலாக "வெளிநாடு போகிறேன்" என்று பயணம் சொல்ல வந்தாய்.பதினான்கு வருடத்திற்கு பிறகு இன்றும் பயணம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்.
இன்னும் எத்தனை முறை பயணம் சொல்வாய்..? 14 வருடமாக அப்படி என்னதான் சம்பாதித்து விட்டாய் ? உன் திறமைக்கும்,உழைப்புக்கும்,படிப்பிற்கும் இங்கேயே 14 வருடத்தில் நிறைய சம்பாதித்திருக்க முடியும்.
முதன் முதலாய் திரும்பி வந்தபோது உன் அம்மாவின் நோயையும் அவர்கள் படும் கஷ்டத்தையும் அருகிலிருந்து பார்த்த பிறகும் கூட நீ விடுமுறை முடிந்து போனாய்....கல்நெஞ்சக்காரன் நீ....!
அதற்கடுத்து ஏதோ ஒரு விடுமுறையில் நீ வரும்போது உன் அப்பா இல்லை.
உன்னைத் தூக்கி வளர்த்த உன் அப்பாவின் மரணத்திற்கு தொலைபேசியில் கதறினாய்.ஒரு வாரமாய் சாப்பிடாமல் தவித்தாய்..இதுதான் பெற்றோருக்குச் செய்யும் கடமையா ..?
கடைசி காலத்தில் மருந்து கூட வாங்க ஆளில்லாமல் பிள்ளையிருந்தும் அனாதையாய்தான் இறந்து போனார்.அவரின் பிணத்தை கூட உன்னால் பார்க்க முடியவில்லை.
கோடி ரூபாய் அப்பா,அம்மாவிற்கு அனுப்பினாலும் கடைசி காலத்தில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு உன் வெளிநாட்டு வாழ்க்கை என்ன பதில் தரும் ?
உன் தங்கச்சி படிப்பிற்கும் பணம் அனுப்பினாய் ,திருமணத்திற்கு நகை,பணம் தந்தாய். அன்பும்,அரவணைப்பும் இல்லாத பாசங்களை காகிதத்திலே பரிமாறும் உறவாகி நிற்கிறாள் அவள்.
நண்பா,
கல்யாணத்திற்கு முன்பு எப்படியோ..! ஆனால் உன்னையே வாழ்க்கை என்று வந்த மனைவியை விட்டுவிட்டு 45 நாட்களில் வெளிநாடு போனாய்.எப்படிடா மனம் வந்தது ? நீ கோபப்பட்டாலும் சரி..உன் மீது உரிமையுடன் கேட்கிறேன்..எதற்காக திருமணம் செய்தாய் நீ ?
45 நாட்கள் அன்பையும்,பாசத்தையும் அள்ளி அள்ளித் தந்து விட்டு ஏங்கித் தவிக்க பறந்து விட்டாயே..! பணம் மட்டும்தான் வாழ்க்கையா ?
எல்லாவற்றையும் விடு
இந்த முறை உனக்கான ஒரு வாரிசு...! அந்தப் பிஞ்சு முகத்தை மறந்து செல்லத் துணிந்து பயணம் சொல்ல வந்திருக்கிறாய்.அன்புக் குழந்தையின் பொக்கை வாய் சிரிப்புக்கு...உன் லட்சங்கள் தூசுதான்.
நீ உயிரோடிருந்தும் உன் குழந்தை தந்தையின் அரவணைப்பு,கணடிப்பு,அறிவுரையில்லாமல் வளரப் போகிறது.
வேண்டாம் நண்பனே...! இப்படிச் சம்பாதிக்கச் சொல்லி யாரும் உன்னை நிர்பந்திக்கல..! சென்னையில் கூட என்னால் இருக்க முடியவில்லை,நம் மண்னைத் தேடுகிறது, நம் ஊர் காற்றுக்கு உயிர் ஏங்கி தவிக்கிறது.அம்மாவின் மடியில் தலை வைத்து ஊர் கதை கேட்க ஆவல் கொள்கிறது.அப்பாவிற்கு சொடக்கு விட..தம்பியை அதட்டி படிக்க் சொல்ல...தெருவில் உள்ளவர்களுடன் உறவாட....
இதற்கெல்லாம் எத்தனை கோடி ஈடாகும்..? அப்பா,அம்மா,மனைவி,மக்கள்,குடும்பம்,சொந்தம்,கா தல், கனிவு, சுற்றம்,பந்தம்...எல்லாவற்றையும் விட..இளமையைத் தியாகம் செய்து விட்டு...எத்தனை...எத்தனை...நண்பர்கள் நம்மூரிலே...!
14 வருடத்தில் 6 விடுமுறை ! ஒரு விடுமுறைக்கு 2 மாதம் வீதம் 1 வருடம் ஊரோடு இருந்திருக்கிறாய்.13 வருடம் அகதியாய் வாழ்ந்திருக்கிறாய்.
இம்மண்ணின் மைந்தன் நீ! வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இது! உன் வாழ்வுக்கா இங்கு வழியில்லை?
ஊரிலே நல்லதொரு தொழில் தொடங்கு அல்லது உன் படிப்புக்கு வேலை தேடு .கால் வயிறு கஞ்சின்னாலும் மனம் நிறைஞ்சு வாழணும்...
உன் பயணத்தை ரத்து செய்..ஊரில் தொழில் துவங்கு...உன் முதல் பார்ட்னர் நான்..!
மற்றவை நேரில் பேசுவோம்...போய் விடாதே! நான் வரும்போது நீ ஊரில் இருக்கணும்..?!
எதிர்பார்ப்புடன்
உன் நண்பன்